மீலாது நபி திருநாளுக்கு மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இறைவனை வணங்கி மகிழ்வோம்; பிற சமூகங்களோடு இணங்கி வாழ்வோம்; எளிய மக்களுக்கு உதவி செய்து வாழ்வோம் என சமூக ஒற்றுமையையும், சமய நல்லிணக்கத்தையும் நபிகள் (ஸல்) பெருமானார் வற்புறுத்தி அறிவுறுத்தினார்கள்.
“பசி உள்ளோருக்கு அன்னம் இடுங்கள்; நோயாளிகளைப் போய்ப் பார்த்து நலம் விசாரியுங்கள்” என்று, மனிதநேயத்தைப் போதித்த மாண்பாளர் ஆவார்.
மதவெறியில், மது வெறியில் ஆழ்ந்து மனிதப் பண்பாடிழந்த மக்களைத் திருத்திட மார்க்கம் கண்ட அம்மனிதப் புனிதரின் வாழ்க்கை மனித குலத்திற்கு அழகிய முன்மாதிரி என்று திருக்குரான் போற்றும் சிறப்புடையது. அண்ணல் நபிகளின் (ஸல்) வாழ்க்கையில் ஆயிரமாயிரம் அறிவுரைகள் – வழிமுறைகள் – நம் சமுதாய அரசியல் பிணிகளைப் போக்கும் அருமருந்துகளாக விளங்கக் காணலாம்.
கல்லடியும், சொல்லடியும் கயவர்கள் தந்திட்டபோதும், உற்றார், உறவினர் சுற்றம் அனைவரும் எதிர்த்தபோதும், உற்ற மனைவி, பெற்ற பிள்ளை, அனைவரையும் துறந்து நகரை விட்டுத் தன்னந்தனியாக வெளியேறிடும் நிலைமை ஏற்பட்டபோதும், அடுக்கடுக்காக வந்திட்ட இன்னல்கள் அனைத்திற்கும் கலங்காமல் கொண்ட கொள்கையில் – இலட்சியத்தில் – குன்றிமணி அளவும் உறுதி குன்றாமல், இறுதி வரை போராடி வென்றிட்டவர்கள் அண்ணல் எம்பெருமானார் (ஸல்) ஆவார்கள்.
உத்தமத் திரு நபிகள் (ஸல்) நடத்திய சத்தியப் போராட்டங்கள் அகிலத்திற்கோர் அழகிய முன்மாதிரியாய் அண்ணலை முன் நிறுத்தின. நேர்மையுடனும், தூய்மையுடனும் பெருமானார் வாழ்ந்த எளிய வாழ்க்கைக்கு இணை சொல்ல முடியாது.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போன்ற மனிதர் தற்கால உலகிற்கு சர்வாதிகாரியாக வருவாரேயானால், சகல பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதில் வெற்றி பெற்று உலகிற்கு சமாதானத்தையும், சாந்தியையும் நிலைநாட்டுவார்கள் என்று நம்புகிறேன்” என பேரறிஞர் பெர்னாட்ஷா கூறினார்.
அறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் தமிழ்நாட்டில் மீலாது விழாக்களில் பங்கேற்று நபிகள் பெருமானின் பெருமைகளை எடுத்துரைத்து மத நல்லிணக்கத்துக்கு வலுவூட்டும் வகையில் செயல்பட்டனர்.
உலகெங்கும் வாழும் இஸ்லாமியச் சகோதரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவரும் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளான மீலாது நாளில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இனிய வாழ்த்துகளைக் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.