வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் பரபரப்பு…! ஆட்டோவில் நழுவி சென்ற பேரூராட்சி தலைவர்…!
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியில் இன்று சாதாரண மன்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வைத்தீஸ்வரன் கோயில் 9 வது வார்டு உறுப்பினர் ராஜா கார்த்திகேயன் கடந்த மூன்று கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.
மேலும் அவரை உடனடியாக தகுதி நீக்கம் செய்ய கூட்டத்தில் பேசி முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி அலுவலகத்தில் திரண்ட அதிமுகவினர் இது குறித்து பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டரிடம் திமுகவை சேர்ந்த பலர் தொடர்ந்து பல கூட்டங்களுக்கு வராத நிலையில் அதிமுக உறுப்பினரை மட்டும் தகுதி நீக்கம் செய்ய எப்படி முடிவு செய்தீர்கள் என விளக்கம் கேட்க முற்பட்டனர்.
அப்போது பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து அவரது கணவர் அலெக்சாண்டர் அவரை அவசர அவசரமாக ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைக்க முயன்றார். இதனை கண்ட அதிமுகவினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதமும், தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.