மூன்றாவது நிலக்கரி சுரங்கதிற்காக முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த வ.கௌதமன்..!! சிறப்பு சட்டம் இயக்கப்படுமா என கேள்வி..?
தேர்தல் வாக்குறுதிப்படி “மூன்றாவது நிலக்கரி சுரங்க விரிவாக்கம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை” என அமைச்சரவையை கூட்டி உடனடியாக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். முதல்வருக்கு வ.கௌதமன் கோரிக்கை.
66 ஆண்டுகளுக்கும் மேலாக 35 கிராமங்களை முழுதாக சூறையாடி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்கள் எங்கள் பொன் விளையும் நிலங்களை என்எல்சி என்கிற எமன் விழுங்கிய பிறகும் மூன்றாவது சுரங்கம் என மீண்டும் 1, 1ஏ விரிவாக்கம் எனவும் மென்மேலும் 35க்கும் மேற்பட்ட கிராமங்களை அள்ளி அபகரிக்கும் திட்டத்தினை கைவிட்டு விவசாய நிலங்களை அழித்தது போதும்.
இனி என்.எல்.சிக்கென ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுத்தர மாட்டோம் என்று கடலூர் மாவட்ட மக்களின் தகிப்பையும் எதிர்ப்பையும் உணர்ந்து உள்வாங்கி தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் அமைச்சரவை கூட்டி அவசர சட்டம் இயற்ற வேண்டுமென தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
03.01.2019 அன்று மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களுக்கு அன்றைய எதிர்க்கட்சி தலைவரான தாங்களும், அன்றைய சட்டமன்ற உறுப்பினரான திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களும், கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதிக்கு உட்பட்ட 37 கிராமங்களைச் சார்ந்த சுமார் 13,500 ஏக்கர் நிலங்களை என்எல்சி நிர்வாகம் மூன்றாவது விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தும்.
அந்த திட்டம் கூடவே கூடாதென கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது அன்றைய சட்டமன்ற கூட்டத் தொடரில் இதற்காக மிகக் கடுமையாக வாதம் செய்தீர்கள் என்பது மாபெரும் நெகிழ்விற்குரியது. ஏறக்குறைய அந்த தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கு பின்பு 07.02.2019 தங்களின் ஆணைப்படி கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிராமத்தின் [ இந்த கிராமமும் இப்போது இல்லாமல் போகப் போகிறது.
டாக்டர் கலைஞர் திடலில் இன்றைய வேளாண்துறை அமைச்சராக இருக்கின்ற திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இது எங்கள் மண், எங்கள் உரிமை, எங்கள் நிலத்தின் ஒரு பிடி மண்ணைக் கூட என்எல்சிக்கு விட்டுத் தரமாட்டோம் என்கிற பெரும் முழக்கத்தோடு உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.
கழக ஆட்சி அமைந்தால் மூன்றாவது சுரங்க விரிவாக்கம் வரவே வராது என திட்டக்குடி பேருந்து நிலையத்தில் தாங்கள் நேரிடையாக தந்த தேர்தல் வாக்குறுதியின் காணொளி இப்பொழுதும் வலைதளத்தில் வலம்வருகிறது.
அந்த மக்கள் தங்களை முழுவதுமாக நம்பி ஓட்டளித்து முதல்வராகிய தாங்களும் இன்றைய வேளாண்துறை அமைச்சரும் எங்கள் கடலூரின் மண்ணைக் காக்க அன்று போராடிவிட்டு இன்று ஒன்றிய அரசின் என்எல்சி என்கின்ற எமன் எங்கள் நிலத்தை கூறு போட வருகின்ற போது தங்களின் துறையின் கீழ் இயங்கும் காவல்துறையே அவர்களோடு இணைந்து அடித்து அச்சுறுத்தி நில அபகரிப்பிற்கு பாதுகாப்பு அரணாக நிற்பதென்பது எத்தகைய அறம்..?
எட்டு அடி தோண்டினால் பீறிட்டு அடிக்கும் தன்னூத்து இருந்த எங்கள் நெய்வேலி மண்ணில் இன்று எண்ணூறு அடி தோண்டினாலும் உப்பு நீர்தான் துளிர்க்கிறது. இந்த நிலை கடலூர் மாவட்டத்திற்கு மட்டுமல்ல அக்கம் பக்கத்திலுள்ள அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டங்கள் வரை அதல பாதாளத்திற்கு நிலத்தடி நீர் சென்று விட்டது.
என்எல்சியின் இந்த அத்துமீறல் தொடர்ந்து கொண்டேயிருந்தால் ஒட்டுமொத்த தமிழ் நாடும் உண்ணுகின்ற உணவுக்கு மட்டுமல்ல தாகம் தீர்க்கக் கூட தண்ணீரின்றி தவித்து கதறி ஓலமிடும் காலம் வெகு தூரத்தில் இருக்காது என்பதனை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
1956லிருந்து இன்றுவரை நிலம் கொடுத்த 25 ஆயிரம் குடும்பங்களை என்எல்சியை இயக்கும் இந்திய ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் வாக்குறுதி தந்தும் வேலை தராமல் பச்சையாக ஏமாற்றியிருக்கிறது. மாறாக இந்த மண்ணிற்கும் இனத்திற்கும் சம்பந்தமில்லாத, நிலம் கொடுக்காத பிற மாநிலத்தவர்கள் கூட்டம் கூட்டமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இனியும் இந்த அரச துரோகங்கள் தொடரக்கூடாது.
அறிவியல் நிறைந்த இன்றைய காலக் கட்டத்தில் காற்றில், அணுவில், அருவியில், கடலில், சூரிய ஒளியில், ஏன் குப்பை கழிவுகளில் கூட மின்சாரம் எடுக்கும் தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் காலங்காலமாக எங்கள் தாய் தந்தை, மூதாதையரோடு நாங்கள் வாழ்ந்த எங்களின் வாழ்விடங்களையும் சோறிட்ட எங்களின் தாய் நிலங்களையும் அள்ளி அபகரித்துத்தான் மின்சாரம் தயாரிப்போம் என அடம் பிடிப்பது இனி ஒரு காலமும் ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல எங்களால் ஒருபோதும் அனுமதிக்கவும் முடியாது.
ஆகையினால் தமிழ்நாடு அரசு கடலூர் மக்களின் தாங்க முடியாத பேரவலத்திற்கும் பெரும் கதறலுக்கும் மதிப்பளித்து மூன்றாவது நிலக்கரி சுரங்க விரிவாக்கம் உள்ளிட்ட ஏனைய எந்த விரிவாக்கத்திற்கும் இனி தமிழ்நாட்டில் இடமில்லை என பிரகடனப்படுத்தும் விதமாக போர்க்கால அடிப்படையில் அமைச்சரவையை கூட்டி உறுதியானதொரு அவசர சட்டத்தை இயற்றும்படி உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
ஒருவேளை எங்கள் மக்களின் உணர்வுகளை புறம் தள்ளி விட்டு மீண்டும் மீண்டும் எங்கள் மண்ணையும் மண்ணின் வளத்தையும் கொள்ளையடிக்கும் நிலை தொடருமேயானால் ஒரு மாபெரும் மக்கள் புரட்சியை தவிர்க்கவே முடியாது என்பதனை அடி வயிற்று பெரு நெருப்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
Discussion about this post