நாட்டிலேயே முதல் முறையாக எலியை கொன்றதற்காக உத்தரப்பிரதேச போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பரோலியை அடுத்துள்ள படாவுன் பகுதியை சேர்ந்த 30 வயது நபரான மனோஜ் குமார் என்பவர், மண்பாண்டம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் மீது எலியின் வாலில் செங்கல்லை கட்டி கால்வாயில் மூழ்கடித்து கொன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதற்காக 30 பக்க குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விலங்கு உரிமை ஆர்வலர் விக்கேந்திர சர்மா என்பவர் மனோஜ் குமார் எலியை கொன்றது தொடர்பான சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தாறுமாறு வைரலானதோடு, இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
இதனை அடிப்படையாக கொண்டு மனோஜ் குமார் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 11 (1) (விலங்குகள் வதை தடுப்புச் சட்டம்) மற்றும் பிரிவு 429 (விலங்குகளைக் கொல்வது அல்லது காயப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை, ஊடகங்களில் வெளியான வீடியோக்கள், சம்பந்தப்பட்ட பல்வேறு துறை வல்லுனர்களின் கருத்துகள் உள்ளிட்ட 30 பக்க குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற விநோதமான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது இதுவே முதல் முறை என உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.