திருச்சி நூலகத்திற்கு காமராசர் பெயர்..! சூட்டப்பட காரணம்..? முதலமைச்சர் விளக்கம்..!!
தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த இரண்டு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் 17-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. 3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இன்று சட்டப்பேரவை கூடியது.
அப்போது உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நூலகங்களுக்கு மாபெரும் தலைவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இந்த அவையில் அறிவிக்கப்பட்டவாறு, திருச்சியில் 290 கோடி ரூபாய் செலவில் என்னால் அடிக்கல் நாட்டப்பட்ட மாபெரும் நூலகத்திற்கு தலைவர் கலைஞர் பெயர் சூட்டப்பட்டிருப்பதாக நான் பார்த்தேன்.
தலைவர் கலைஞர் அவர்களின் திருக்கரங்களால் கோட்டூர்புரத்தில் திறந்து வைக்கப்பட்ட நூலகத்திற்கு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று பெயர் சூட்டப்பட்டது. மதுரையில் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, ஒரே ஆண்டில் அதன் கட்டுமானப் பணிகள் முடிவுற்று, மாபெரும் சாதனை செய்யப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதுவரையில் சுமார் 16 இலட்சம் பொது மக்களும், மாணவர்களும் இந்த நூலகத்தால் பயனடைந்திருக்கின்றனர்.
அதேபோன்று, திருச்சியில் அறிவிக்கப்பட்டிருக்கிற நூலகத்திற்கு கடந்த மாதத்தில் நான் அடிக்கல் நாட்டியிருக்கிறேன். இந்தப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கோவையில் தந்தை பெரியார், சென்னையில் பேரறிஞர் அண்ணா, மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்களின் பெயர்களைத் தாங்கி நூலகங்கள் நிறுவப்பட்டுள்ளதோ, அதனைத் தொடர்ந்து, திருச்சியில் அமையவிருக்கும் நூலகத்திற்குப் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.
காமராசர் பெயர் சூட்டப்பட காரணம் :
தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் பள்ளிகளைத் தொடங்கி, மதிய உணவு அளித்து, இலட்சக்கணக்கான குடும்பங்களின் கல்விக் கண்களைத் திறந்து, தமிழ்நாட்டின் கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயரைச் சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பெயர் சூட்டுவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.