விஜய் மீது தேச துரோக வழக்கு…? போலீசில் புகார்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில், அரசியல் கட்சியை சமீபத்தில் தொடங்கினார். இந்த கட்சிக்கான கொடி, நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்த கொடியின் மேல் பக்கத்திலும், கீழ் பக்கத்திலும் சிவப்பு நிறமும், நடுவில் மஞ்சள் நிறமும் இடம்பெற்றுள்ளது. மேலும், நடுவில் வாகை மலரும், அதன் இரண்டு புறங்களிலும், போர் யானைகளும் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சியை பார்த்த பகுஜன் சமாஜ் கட்சியினர்,
யானைகள் கட்சியின் கொடியில் இருக்கக் கூடாது என்றும், இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கூறியிருந்தனர். இதனால், விஜயின் கட்சி கொடி மாற்றப்படுமா? என்று கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில், சமூக ஆர்வலரான ஆர்.டி.ஐ செல்வம், சென்னை காவல்துறை ஆணையரகத்தில், புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், இந்திய நாட்டை இழிவுப்படுத்தும் வகையில், ஸ்பெயின் நாட்டு கொடியின் நிறத்தை தன் கொடியில் விஜய் பயன்படுத்தியிருப்பதாகவும், எனவே, அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், அவர் கூறியுள்ளார்.
மேலும், த.வெ.க-வின் கொடி, தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது என்றும், கேரள அரசின் போக்குவரத்துத்துறையின் சின்னத்தையும் அவர் பயன்படுத்தியிருப்பதாக, புகாரில் கூறப்பட்டுள்ளது. இவரது புகாரை ஏற்று, வழக்கு பதிவு செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..
-பவானி கார்த்திக்