கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான கடந்த செப்டம்பர் 15 அன்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இ-சேவை மூலம் நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியான நபர்களுக்கு 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

அத்துடன், நிராகரிக்கப்பட்ட 56.50 லட்சம் பேருக்கு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து இன்று முதல் அவர்களின் செல்போன் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அறிந்துகொள்ள முடியாதவர்கள், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















