மறுமணம் செய்துக் கொள்வதாக இருந்தால், தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என இமான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். கடந்த 2019-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்காக தேசிய விருதை வென்றார்.
இதற்கிடையில், கடந்த 2008 ஆம் ஆண்டு இமான் மோனிகா ரிச்சர்டு என்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சட்ட ரீதியாகத் தனது மனைவியைப் பிரிந்துவிட்டதாக ட்விட்டர் மூலம் இமான் அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த உமா என்பரை இமான் மறுமணம் செய்து கொள்ளப் போவதாக கோலிவுட்டில் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இது குறித்து டி.இமான் அளித்துள்ள பேட்டியில், “விவாகரத்து என்றாலே ஆண் சமுகத்தின் மீதுதான் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. தவறுகள் யார் மீது வேண்டுமானாலும் இருக்கலாம். அதை வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தனிப்பட்ட முறையில் விவாகரத்து கூடாது என்பதுதான் எனது எண்ணம். என் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருப்பேன். நான் மறுமணம் செய்து கொள்ள குடும்பத்தினர் விரும்புகின்றனர். அடுத்து நான் திருமணம் செய்தாலும் குடும்பத்தினர் நிச்சயித்த திருமணமாகத்தான் அது இருக்கும்.
திருமணம் செய்து கொள்ளும் பெண் எனது குழந்தைகளுக்கும் தாயாக இருக்க வேண்டும், விதவை அல்லது விவாகரத்து செய்த பெண்ணாகவும், குழந்தை இருக்கும் பெண்ணாகவும் பாருங்கள் என்று குடும்பத்தினரிடம் கூறியுள்ளேன். குழந்தை இருக்கும் பெண்தான் எனது குழந்தைகளையும் தனது குழந்தைபோல் பார்த்துக் கொள்வார்” என தெரிவித்துள்ளார்.