ஆகஸ்ட் 20க்குள் பணிகளும் முடிவடையும்..! அமைச்சர் கே.என்.நேரு உறுதி..!
“சென்னையில் 9,643 சாலை பணிகள் முடிந்து விட்டது, 597 சாலைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, ஆகஸ்ட் 20க்குள் அத்தனை பணிகளும் முடிவடையும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்..”
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது..
இந்த ஆய்வுக் கூட்டத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா.கார்த்திகேயன், தமிழ்நாடு நகர்ப்புர உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் (TNUIFSL) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் முனைவர் எஸ்.விஜயகுமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், புதிய திருப்பூர் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் ஹனீஸ் சாப்ரா, தமிழ்நாடு நகர்ப்புர நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக ( TUFIDCO) மேலாண்மை இயக்குநர் கே. விவேகானந்தன்,. பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், நகராட்சி நிருவாக இயக்குநர் சு.சிவராசு மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்..
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு.. இந்த ஆண்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை முழுமையாக விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த கூட்டம் நடைபெற்றது..
நடக்க வேண்டிய பணிகளை விரைவாக முடிக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது, அதில் நிறைவேற்ற ஏதேனும் சிரமம் இருந்தால் அதையும் அரசு சார்பில் சிரமங்களை தவிர்த்து அவர்களுக்கு செய்து கொடுக்கக்கூடிய பணிகள் குறித்து பேசி உள்ளோம்.. அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகள் சொல்லியுள்ளனர்..
மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிந்து உள்ளது இன்னும் 15 நாட்களில் மீதமுள்ள பணிகளும் முடிவடையும், சில இடங்களில் சில சிரமங்கள் இருந்தது, உடனடியாக முடிக்க சொல்லியுள்ளோம், முடிப்பதற்கு திட்டமிட்டதற்கே இன்னும் எட்டு மாதங்கள் உள்ளது.. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க அத்தனை நடவடிக்கைகளும் எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது..
ஆகாய தாமரைகளை அகற்ற சொல்லியும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.. அனைத்து பணிகளும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. சென்னையில் மழை நீர் தேங்காத வகையில் அனைத்து சுரங்கப்பாதைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது, கணேசபுரம் சுரங்க பாதையில் மட்டும் ரயில்வே பணிகள் நடைபெறுவதால் சிறிது சிரமம் உள்ளது, மற்ற அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
ஓட்டேரி நல்லான் கால்வாயில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.. துறைமுகம் மதுரவாயில் இடையே அமைக்கப்பட்டு வரும் ஈரடுக்கு மேம்பால பணிகளுக்காக கூவம் ஆற்றின் இடையே அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் செப்டம்பர் மாதத்திற்குள் அகற்றப்படும்..
20 சென்டிமீட்டர் மழை அளவை தாங்கும் அளவிற்கு தான் மழைநீர் வடிகால்கள் கட்டப்பட்டுள்ளது, ஒரே நாளில் 40 சென்டிமீட்டர் மழை பெய்தால் இரண்டு நாள் மூன்று நாட்கள் வேறு வழி இல்லை எடுத்து தான் ஆக வேண்டும்..
சராசரி மழை பெய்யும் பொழுது அது வடிவதற்கான அத்தனை வசதிகளும் உள்ளது, திடீரென 40, 50 சென்டிமீட்டர் பெய்யும் பொழுது சற்று சிரமமாக உள்ளது, இயற்கை அதிகமாக வரும் பொழுது எதையும் நம்மால் எதிர்பார்க்க முடியாது.. ஒன்றிய அரசு பணம் கொடுக்கவில்லை தமிழ்நாடு அரசு சார்பில் 7 நாட்களுக்குள் மின்சாரம் கொடுக்கப்பட்டு விட்டது, 128 இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு இருந்தது அதனையும் சரி செய்து குடிநீர் வழங்கப்பட்டு விட்டது..
சென்னையில் 9,643 சாலை பணிகள் முடிந்து விட்டது, 597 சாலைப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, 528 சாலைகள் எடுக்க வேண்டி உள்ளது, ஆகஸ்ட் 20க்குள் அத்தனை பணிகளும் முடிவடையும் என்று கூறினார்..
-லோகேஸ்வரி.வெ