கடிதம் எழுதி நூதன முறையில் கொள்ளை அடித்த திருடன்.. போலீசார் வலைவீச்சு..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் சேர்ந்தவர் சித்திரை செல்வின். இவரும் இவரது மனைவியும் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர்.
சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் மகன் பணியாற்றி வருகிறார். மருமகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பார்ப்பதற்காக கடந்த 17ஆம் தேதி சித்திரை செல்வின் மனைவியுடன் சென்னை சென்றிருக்கிறார். அப்போது வீட்டை பராமரிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்ற பெண்ணிடம் வீட்டுச் சாவியை கொடுத்துள்ளார்.
நேற்று மாலை வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்ய வந்த செல்வி வீட்டின் கதவுகள் உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசாருக்கும் சித்திரை செல்வினுக்கும் தகவல் தெரிவித்தார்.
மெஞ்ஞானபுரம் போலீசார் தொலைப்பேசியில் சித்திரை செல்வினை தொடர்புகொண்டு பீரோல் லாக்கரை வைத்திருந்த பொருட்கள் மற்றும் பண விவரங்களை கேட்டனர்.
இதில் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், ஒன்றரை பவுன் எடை கொண்ட இரண்டு கம்மல் ஜோடிகள், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது கொள்ளையன் பச்சை நிற மை பேனாவால் ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருப்பதை போலீசார் கைப்பற்றினர்.
அதில், “என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என்னுடைய மனைவிக்கு உடம்பு சரியில்லை, மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத்தால் தான் கொள்ளையடித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த மெஞ்ஞானபுரம் போலீசார் கடிதம் எழுதி கொள்ளை அடித்த திருடனை திவீரமாக தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்