திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே குடும்பதகராறு காரணமாக அண்ணன் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பெரியபாளையம் அடுத்த கன்னிக்கைப்பேர் கிராமத்தை சேர்ந்த திராவிடபாலு என்பவர், எல்லாபுரம் திமுக ஒன்றிய கழகச்செயலாளராகவும், கன்னிகைப் பேர் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். தற்போது திராவிட பாலுவின் தம்பி சத்தியவேலு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக செயல்பட்டு வரும் நிலையில், திராவிட பாலு குடும்பத்தினருக்கும், தம்பி சத்தியவேலு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இரு குடும்பங்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், திராவிட பாலுவின் மனைவி செல்வி அவரது மகன் முருகன் , மற்றும் மருமகள் ரம்யா, முருகனின் மகன் கருணாநிதி ஆகியோரை, சத்தியவேலுவின் மகன் விஷால் என்பவர் இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார். இதில் 4 பேரும் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ரம்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த 3 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட சத்தியவேலுவின் மகன் விஷாலை தேடி வருகின்றனர்.