கோட் திரைப்படத்தை பார்க்க ஓடோடி வந்த புது ஜோடி..!
நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இந்த படத்தை அவரது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
பேனர்கள் அமைத்து பட்டாசுகள், மேளம் தாளம் என கொண்டாடி வருகின்றன. யுவன் சங்கர் ராஜா இசையில் பிரஷாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். கோட் திரைப்பட சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.
இந்தநிலையில் திருமணம் முடிந்த தம்பதியினர் மருவீட்டுக்கு கூட செல்லாமல் தளபதியின் கோட் திரைப்படத்தை பார்க்க திரையரங்கிற்கு வந்தது பலரது கவனத்தையும் பெற்றது.
அதாவது விஜய்யின் தீவிர ரசிகரான சதீஷ் என்பவர் சைதாப்பேட்டை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியாக உள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில் கோட் படம் பார்க்க தனது மனைவியுடன் சென்னை காசி திரையரங்கிற்கு வந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது ”திருமணம் முடிந்து நாங்கள் பார்க்கும் முதல் படம் விஜய் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதற்கு முன் வெளியான எந்த திரைப்படத்தையும் நான் திரையரங்கிற்குச் சென்று பார்க்கவில்லை” என கூறியுள்ளார்.