மருத்துவமனையை அடித்து நொறுக்கிய கும்பல்….அதிர்ச்சியில் நோயாளிகள்..
போதை மாத்திரைகளை விற்பனை செய்த வழக்கில் மயிலாப்பூரைச் சேர்ந்த சைக்கோ சரண், மந்தவெளியைச் சேர்ந்த போண்டா ராஜேஷ் மற்றும் தினேஷ் ஆகிய மூன்று நபர்களை நேற்று இரவு அபிராமபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யபட்ட நபர்களை சிறைக்கு அனுப்புவதற்கு முன்பாக உடல்நலம் குறித்த தகுதிச் சான்று பெறவேண்டும் என்பதற்காக போலிசார் அவர்களை இன்று மதியம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது கைது செய்யப்பட்ட நபர்களின் நண்பர்கள் மற்றும் ஒரு திருநங்கை என ஐந்து பேர் மருத்துவமனைக்கு
வந்துள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் தாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என கூறியதோடு இல்லாமல் பிளேடால் தங்களைத் தாங்களே கை கால்களில் அறுத்துக் கொண்டுள்ளனர்.
மேலும் அங்கிருந்தவர்கள் அவர்களை பிடிக்க முயன்ற போது, மருத்துவமனை வளாகத்தில் இருந்த பொருட்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த கண்ணாடிகள், நோயாளிகளை பரிசோதனை செய்யும் கருவிகள், கணினி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி நாசம் செய்துள்ளனர்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
இச்சம்பவத்தால் இராயப்பேட்டை மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-பவானி கார்த்திக்