விமான சாகசம் குறித்து கனிமொழி உள்ளிட்டோர் விமர்சனம்..!
சென்னையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்திய விமான படையின் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் சூழ்ந்த நிலையில் கூட்டத்தில் குழந்தைகள், பெண்கள் , பெரியவர்கள் என 10க்கும் மேற்ப்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர். மயக்கமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது நடைபெற்ற விமான சாகசத்தை காண லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் திரண்ட நிலையில் மெரினா கடற்கரையானது விழாக்கோலம் போல காட்சியளித்தது.
மக்கள் அமைதியாக விமான சாகச நிகழ்ச்சியை காண 6500 போலீசாரும் 1500 ஊர்க்காவல் படையினரும் மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விமான சாகச நிகழ்ச்சியில் தேஜஸ், டகோட்டா,ரஃபேல், மிக்-29, பிலாட்டஸ், ஹார்வர்ட், டார்னியர், மிராஜ், சுகோய், சராங் குழு, சூர்ய கிரண் விமானக் குழு, ஆகாஷ் கங்கா குழு, சேதக், ஜாகுவார் உட்பட 20க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் விமானங்களும் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்தினருடன் மெரினாவிற்கு வருகை தந்தார்.
மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் மெரினாவில் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
இதையடுத்து திமுக துணை பொது செயலாளரான கனிமொழி அவர்கள் தனது எக்ஸ் பக்கத்தில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு வருகை தந்த மக்கள் கூட்ட நெரிசலிலும் வெப்ப நிலை அதிகமாக இந்ததிலும் உயிரிழந்த 5 பேர் நிலையை கண்டு மன வருத்தம் அடைந்ததையும் வேதனையாக இருப்பதாகவும், இனிவரும் காலங்களில் இது போன்ற கூட்டத்தை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சி குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அவர்கள், கொளுத்தும் வெயிலில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் போது ஆக்ஸிஜன் குறைபாடு உண்டாகும். இதனால் உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம், மாரடைப்பு போன்றவை உண்டாகும் என்பது ஒரு எதார்த்தமாகும், இதற்கெல்லாம் ஏற்பாடுகள் செய்துவிட்டு தான் அரசு இந்நிகழ்ச்சிக்கு அனுமதித்திருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான முதலுதவி அளிக்க சிகிச்சை அளிக்க மையங்களும் இல்லாத நிலையில், கடும் நெரிசலில் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர்கள் அவதி அடைந்துள்ளனர். இனியாவது இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.