திருச்சி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த நகைகளை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூர் பகுதியில் ராதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் வேலாயுதம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் இவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ராதாவிற்கு அவரது மகன் ரஜினி என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால் நீண்ட நேரமாக செல்போனை ராதா எடுக்காத நிலையில் சந்தேகம் அடைந்த ரஜினி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் தாயார் ராதா கழுத்து, காது அறுக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஜினி, இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து ராதாவை கொலை செய்து விட்டு, கழுத்தில் அணிந்திருந்த தோடு, வளையல் உள்ளிட்ட 4 பவுன் நகையை திருடிசென்றுள்ளதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.