திருப்பத்தூர் அருகே மூடாமல் விட்ட குழியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் – சர்மிளா தம்பதிக்கு ஒன்றரை வயதில் உத்தமன் என்ற ஆண் குழந்தையும், ருத்ரன் என்ற 6 மாத கைக்குழந்தையும் உள்ளனர்.
இன்று குழந்தைகள் இருவரையும் ராமநாயக்கன்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று திரும்பிய போது, சர்மிளா அரபாண்ட குப்பத்தில் உள்ள அவரது அக்கா வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை உத்தமன் வீட்டின் பின்புறம் மழைநீர் தேங்கியுள்ள குழியில் தவறி விழுந்துள்ளது. குழந்தை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சர்மிளா, அவரது அக்கா ஜெயலட்சுமி இருவரும் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.
அப்போது குழந்தை மழைநீர் தேங்கி நிற்கும் குழியில் விழுந்து கிடைப்பதைக் கண்டு பேரதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.