ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார்…. பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்த பெண்கள் மீது மோதி 2 பேர் பலி…!
தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நாலுமாவடியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இவர் செல்போன் கடைக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்குவதற்காக நண்பர்கள் 4 பேருடன் கார் ஒன்றில் பெங்களூருவிற்கு சென்றிருந்தார்.
இன்று அதிகாலை பொருட்களை வாங்கி கொண்டு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்த அவர்கள், தூத்துக்குடி வழியாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது முக்கானணி பகுதியில் உள்ள சாலையோரம் பொதுக்குழாயில் பெண்கள் சிலர் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மணிகண்டன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்களின் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த நட்டார் சாந்தி, பார்வதி, அமராவதி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் சண்முகத்தாய் என்பவர் படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனரர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து கார் ஓட்டுநர் மணிகண்டனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் ஏற்கனவே அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருவதால், வேகத்தடை அமைத்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிண்னர் இச்செய்தியை கேட்டு சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ், கோட்டாட்சியரின் உதவியாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, உடனடியாக அப்பகுதியில் 4 வளைவுகளுடன் கூடிய தடுப்புவேலி அமைக்கப்படும் என உறுதி அளித்தனர்.
மேலும் இன்று இரவுக்குள் வேகத்தடை அமைத்து தருவதாகவும் கூறியுள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகமும், பரபரப்பும் ஏற்ப்பட்டு வருகிறது.
-பவானி கார்த்திக்