முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்..!
தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் மாநில செயலாளர் பிச்சைக்கனி முன்னிலையில் மாவட்டத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பையா அலுவலகத்திற்க்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் சந்தித்து கோரிக்கை மனுவை பெற்றார். இது குறித்து உயர் அதிகாரியிடம் தெரிவிக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாநில செயலாளர் கூறும் போது அரசு பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களை நிர்வாக மாறுதல் மூலம் நிரப்பிவிட்டு மாறுதலுக்காக காத்திருக்கும் ஆசிரியர்களை தமிழக கல்வித்துறை வஞ்சித்துக் கொண்டிருப்பதாக கூறினர்.
இதனால் மன வேதனையில் இருக்கும் ஆசிரியர்களின் நலனை முதலமைச்சர் கவனத்தில் கொண்டு நிர்வாக மாறுதல்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் ஒளிவு மறைவற்ற வகையில் வெளிப்படையான முறையில் கலந்தாய்வு கூட்டங்களை ஆசிரியர்களுக்கு நடத்திட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவி காணப்பட்டது.
-பவானி கார்த்திக்