நடுக்கடலில் தமிழக மீனவர்கள் கைது..!! தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்..!!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேரை, இலங்கை கடற்படையினர் தாக்கி கைது செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கி தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை இலங்கை அழித்து வருகிறது.
இதனால் மீனவர்கள் பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இதற்கிடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகை துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், நடுக்கடலில் தங்கி மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பியுள்ளனர்.
இரவு 8 மணியளவில் அந்த படகுகளை, இலங்கை கடற்படையினர் விரட்டியுள்ளனர். அப்போது, ஒரு விசைப்படகை பறிமுதல் செய்து, அதிலிருந்த 11 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்துள்ளனர். முன்னதாக அந்த படகில் ஏறி இலங்கை கடற்படையினர் சோதனையிட்டதாகவும், அப்போது மீனவர்களை கடுமையாக தாக்கியதாகவும் தெரிகிறது.
கைது செய்யப்பட்ட 11 பேரும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அனைவரும் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர் மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.