இந்தியாவிலேயே தமிழக சிறைத்துறைத்தான் முதலிடம்..!! துணை முதலமைச்சர் பேச்சு…!!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடந்த ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டு, சமூக வாழ்க்கைக்குத் திரும்பிய 750 முன்னாள் சிறைவாசிகள் சுயதொழில் தொடங்கி வாழ்வாதாரத்தை வளமைப்படுத்தும் வகையில் மொத்தம் ரூ.3 கோடியே 75 லட்சம் நிதி உதவி வழங்குவதன் அடையாளமாக மேடையில் 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.
சிறைச்சாலைகள் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை தரும் இடமாக மட்டுமல்லாது, வருங்காலங்களில் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் நல்ல மனிதர்களாக உருவாக்கும் இடமாக திகழ்கின்றன. இதற்காக சிறைவாசிகள் தண்டனைகாலம் முடிவுற்று அவர்களின் விடுதலைக்குப் பின்னர், வேலைவாய்ப்பு பெற அல்லது சொந்தமாக தொழில் அமைத்துக் கொள்ள, அவர்களுக்கு கல்வி, தொழிற்கல்வி மற்றும் சிறைத் தொழிற்சாலைகளில் செயல்முறை அனுபவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு திறன் மேம்பாடுத் திட்டங்கள் சிறைச்சாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
தண்டனை காலத்தில் சிறைவாசிகள் உழைப்பின் அவசியத்தை உணரவும், புதுத் திறன்களைக் கற்கவும், விடுதலை பெற்ற பின்னர் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காகவும், சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெறும் வகையில் சிறைச்சாலைகளில் நெசவு தொழிற்கூடம் (Weaving), காலணி தொழிற்கூடம் (Shoe Making), புத்தகம் கட்டுதல் (Book Binding), தையற்கூடம் (Tailoring), தச்சுக் கூடம் (Carpentry), அடுமனை தொழிற்கூடம் (Bakery) உள்ளிட்ட பல்வேறு தொழிற்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன.
மேலும் தோட்டக்கலை மேம்பாடு, விவசாய உற்பத்தி, இயற்கை உர உற்பத்தி போன்ற பயிற்சிகளும் சிறைகளில் அளிக்கப்படுகின்றன. அத்துடன், சிறைவாசிகள் தண்டனை காலத்தில் இருக்கும் போதே வேலை வாய்ப்பினை வழங்கிடும் வகையில் சிறை வளாகங்களில் திருவாளர்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வுக்கும் ஏற்ற வகையில் பெட்ரோல் சில்லறை விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு தகுதியான சிறைவாசிகளைக் கொண்டு இயக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய முயற்சிகள், முன்னாள் சிறைவாசிகள் சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஊக்குவிக்கும் முக்கிய நடவடிக்கைகளாக அமைகின்றன. சிறைத்தண்டனை முடிவடைந்து சிறைகளிலிருந்து விடுதலையாகும் சிறைவாசிகள் மறுபடியும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காகவும், நேர்மையான வாழ்க்கை முறைக்கு திரும்ப உதவுவதற்காகவும், விடுதலை பெற்ற சிறைவாசிகளின் நலனுக்காக, தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் 1921 ஆம் ஆண்டு, நிறுவன சட்டம் 1913ன் படி ஒரு அலுவல் சாரா நிறுவனமாக தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கத்தின் சார்பில், சிறை மீண்டவர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கும், வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கும் தேவையான நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களது சமூகப் புத்துயிர்ப்பை உறுதி செய்யும் வகையில், வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் மறுவாழ்வு திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமே சிறை மீண்டோர் நலச்சங்கத்தை செயல்படுத்தி வரும் ஒரே மாநிலமாக திகழ்வது, மிகுந்த பெருமைக்குரியதாகும். இது, தமிழ்நாடு அரசு மற்றும் சிறைத்துறை மேற்கொள்ளும் முன்மாதிரியான மறுவாழ்வு முயற்சிகளின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது.
தமிழ்நாடு சிறைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 750 முன்னாள் சிறைவாசிகளுக்கு, தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் மூலமாக கறவை மாடுகள் வாங்குதல், தையல் தொழில், தேநீர் கடை, சலவைத் தொழில், உணவகம் அமைத்தல் போன்ற சுயதொழில்கள் தொடங்கிட 3 கோடியே 75 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 10 முன்னாள் சிறைவாசிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் ரகுபதி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..