கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்திய மாநிலம் தமிழகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக நிர்வாகி புழல் நாராயணனின் இல்லத் திருமணம் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களிடம் செல்; மக்களிடம் கற்றுக்கொள் என்ற அண்ணாவின் வழிகாட்டுதலை பின்பற்றி உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்பட வேண்டும் என்றார்.
திமுக மீது மக்கள் வைத்த நம்பிக்கையே சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்கு காரணம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு- மக்கள் திமுக மீது வைத்த நம்பிக்கையை காட்டுகிறது. எதிர்கட்சியோ, ஆளுங்கட்சியோ மக்களுக்காக பணி ஆற்றி வருகிறோம். எதிர்க்கட்சியாக இருந்தபோதே மக்களுக்காக செயல்பட்ட இயக்கம் திமுக என்று குறிப்பிட்டார்.
நாம் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா பிடி அதிகம் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியா மட்டுமின்றி உலகிலேயே கொரோனாவை கட்டுப்படுத்திய முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.
நான் இந்த திருமணத்துக்கு வரும்போதுகூட, என் வீட்டு வாசலில் ஒரு திருமணத்தை நடத்தி முடித்துவிட்டு வந்திருக்கிறேன். வைதீக திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதர்களுக்கு கிராக்கி உள்ளதோ இல்லையோ, அவர்களை விட சீர்திருத்த திருமணம் நடத்தி வைக்கும் இந்த புரோகிதருக்கு கிராக்கி அதிகம் உள்ளது, என கூறினார்.