விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இருக்கக்கூடிய எக்கியார்குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பலர் கள்ளச் சாராயம் அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அனைவரும் விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை போன்ற பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும், மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இதுவரை 12 பேர் இறந்துள்ளனர். மேலும் 40 பேர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும் 3 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், ஒருவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும் தற்போது சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் வழங்கப்பட்டு வரும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் விரைந்தார்.
முண்டியாம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர், கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்கிறார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர், எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் குடித்தவர்களுக்கு ஜிப்மர் முண்டியம்பாக்கம் மருத்துவமனகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரனையில் மெத்தனால் சாராயத்தினால் உயிரிழந்தது தெரியவந்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதே போன்று துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இரு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் வழங்கவும், சிகிச்சை பெற்றவர்களுக்கு 50 ஆயிரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் சாராயம் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இரு சம்பவமும் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.