”சூப்பர் ஸ்டார் படம் வர்றதுதான் சரி”- நடிகர் சூர்யா
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். ரஜினியின் 170வது படமாக உருவாகி உள்ள இப்படத்தை இயக்குநர் டி.ஜே. ஞானவேல் ராஜா இயக்கியுள்ளார்.
இப்படத்தில், ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, சர்வானந்த், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா, அபிராமி, கிஷோர், ரவிமரியா என நட்சத்திர பட்டளமே நடித்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தநிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் விருவிருப்பாக நடந்து கொண்டிருப்பதை தொடர்ந்து இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 10 தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
ஆனார் அதே தேதியில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் ரிலீசாக உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதனால் நெட்டிசன்கள் மத்தியில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியது. காரணம் இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதியை அறிவித்திருந்தது தான்.
இதனால் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா என்ற கேள்வி தொடர்ச்சியாக எழுந்து வந்தது. இந்த சூழலில் நடிகர் சூர்யா கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் “மூத்தவர், சினிமாவின் அடையாளம், 50 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் படத்திற்கு வழிவிடுவோம் எனவும் கங்குவா ஒரு குழந்தை எனவே சூப்பர் ஸ்டார் படம் வர்றதுதான் சரியாக இருக்கும் என்று கூறிய அவர் விரைவில் கங்குவா திரைப்படத்தின் மாற்று தேதி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் வேட்டையன் திரைப்படம் வருவது மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றொருபுறம் இரண்டு ஆண்டுகளாக சூர்யாவின் கங்குவா திரைப்படத்திற்காக காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்

















