267 கிலோ தங்கம் கடத்தல்.. விமான நிலையத்தில் நடந்த சம்பவம்.. 2 பேர் மீது காபி போசா சட்டம்..!
சபீர் அலி, இலங்கை கடத்தல் பயணி ஆகிய இருவர் மீதும் சுங்கத்துறை அதிகாரிகள் அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து தங்கத்தை வாங்கும் சிலர், அதற்கான உரிய வரி கட்டாமல், இந்தியாவிற்கு கடத்துகின்றனர். இவ்வாறு தங்கத்தை கடத்துவதால், இந்திய நாட்டிற்கு பல கோடிக் கணக்கான வருமானம் பாதிப்பு அடைகிறது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், துபாயில் இருந்து சென்னை வழியாக, பயணி ஒருவர் இலங்கை செல்ல இருந்தார். அப்போது, அங்கிருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை, விமான நிலையத்தில் இருந்த பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் ஊழியர்களிடம் கொடுத்துவிட்டு, இலங்கைக்கு தப்பி செல்ல முயன்றார்.
ஆனால், அதற்குள் அவரை பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தினர். அதில், 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து, வழக்கில் தொடர்புடைய பலரையும் அதிகாரிகள் தொடர்ச்சியாக கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சபீர் அலி, இலங்கை கடத்தல் பயணி ஆகிய இருவர் மீதும் சுங்கத்துறை அதிகாரிகள் அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் சபீர் அலி கடையில் பணியாற்றியிருந்த ஊழியர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர்கள் 7 பேருக்கு மட்டும், நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீன் கிடைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்படவில்லை, அவர்கள் மீதான வழக்குகள் தொடர்ந்து விசாரணையில் இருந்து வருகிறது.