பொன்னேரியில் வணிகர்கள் பாதுகாப்பு வேண்டி கடையடைப்பு..! தொடரும் ஆர்ப்பாட்டம்..!!
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வியாபாரிகளுக்கும் வியாபாரத்திற்கும் பாதுகாப்பு வேண்டி முழு கடையடைப்பும் அதனை தொடர்ந்து அனைத்து வியாபாரிகளும் இணைந்து பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து பொன்னேரியில் காலையிலிருந்து மழை பெய்து வரும் நிலையில் கொட்டும் மழையிலும் போராட்டத்தை கைவிடாது நனைந்த படியே இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
பொன்னேரியில் ரவுடிகளின் அட்டூழியம் தொடர்ந்து நீடித்து வருவதால் இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தொடர்ந்து வியாபாரிகள் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு வருகின்றனர். செல்போன் கடைகளில் தொடர் திருட்டு மளிகை மற்றும் காய்கறி கடைகளில் வியாபாரிகள் தொடர்ந்து தாக்கப்படுவது பஜார் வீதியில் செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்கள் நடந்து வரும் நிலையில் இது குறித்து பலமுறை காவல் துறையினருக்கு புகார் அளித்தும் வியாபாரிகள் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.
இதனால் வியாபாரிகள் பொன்னேரி பகுதியில் பெரும் அச்சத்தில் உள்ள நிலையில் வியாபாரிகளுக்கும் வியாபாரத்திற்கும் பாதுகாப்பு வேண்டி இன்று முழுநாள் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இன்று காலை முதல் கட்டமாக பொன்னேரியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. காலை 10 மணி அளவில் அனைத்து வியாபார பெருமக்களும் அண்ணாசிலை அருகில் கூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் பொன்னேரியில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது.
Discussion about this post