ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி வரும் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் 53 மதுபான கடைகளையும் பார்களை மூட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடர் போராட்டம் 2018-ல் நடைபெற்றது. 100-வது நாளாக மே 22ம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில், காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகிறது.
எனவே அன்றைய தினம் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் சம்பவம் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 22.05.2023 அன்று தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை, பார்) விதிகள, 2003 விதி 12 துணை விதி (1) இன்படி 53 மதுபான கடைகளும், பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மதுபான விற்பனை நடைபெறக் கூடாது
மேற்படி நாளில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதால் அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக் கூடாது. மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.