நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு மதிமுக துணை நிற்கும் என மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெற்றது.
இதில்,பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பொருளாளர் கணேச மூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:
- மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் காவிரியில் சொட்டுநீர்கூட வராது. காவிரிப்படுகை மாவட்டங்கள் பாலைவனம் ஆகும். எனவே, எக்காரணம் கொண்டும் கர்நாடக மாநிலத்தின் மேகதாது அணைத் திட்டத்திற்கு ஒன்றிய பாஜ அரசு அனுமதி அளிக்கக்கூடாது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் சார்பில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- கூடங்குளத்தில் அணுஉலை வளாகத்தினுள் அணுக்கழிவு மையத்தை அமைத்து, அதில் கூடங்குளம் மட்டுமின்றி, இந்தியாவில் செயல்படும் 22 அணு உலைகளின் கழிவுகளையும் கொண்டுவந்து குவிப்பதற்கான அபாயகரமான திட்டத்தைச் செயல்படுத்த ஒன்றிய பாஜ அரசு முனைந்து இருப்பது கண்டனத்திற்குரியது. ஒன்றிய பாஜ அரசின் இத்தகைய முயற்சிகள் நெல்லை மாவட்டத்திற்கே பேராபத்தை விளைவித்துவிடும். எனவே இதனைத் தடுத்து நிறுத்துவதுடன், கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அலகு அணுமின் உலைகள் அமைத்திட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும்.
- கடந்த பிப்ரவரி 8ம் தேதி தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மீண்டும் நீட் விலக்கு சட்ட முன் வரைவை நிறைவேற்றி, ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பி இருக்கிறார். மக்களாட்சிக் கோட்பாடுகளுக்கு உரிய மதிப்பு அளித்து, மீண்டும் காலம் தாழ்த்தாமல் ஆளுநர் இச்சட்ட முன்வரைவைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பிட வேண்டும். மருத்துவக் கல்வியில் உண்மையான சமூகநீதி நிலைபெறவும், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மதிமுக உறுதுணையாகச் செயல்படும்.
என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.