கோவையில் போட்டியின்றி மேயராக தேர்வான ரங்கநாயகி… பூங்கொத்துகள் கொடுத்து வாழ்த்து..!
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளது. இங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டபோது 96 வார்டுகளில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது. 3 வார்டுகளை அதிமுகவும், 1 வார்டில் எஸ்டிபிஐ கட்சியும் வெற்றி பெற்றது.
இதனையடுத்து கோவை மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டார். உடல் நலக்குறைவு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சமீபத்தில் மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
திமுக சார்பில் மேயர் வேட்பாளராக 29 வது வார்டு உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அமைச்சர்கள் கே.என் நேரு, முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் கோவை மாநகராட்சி புதிய மேயராக ரங்கநாயகி பொறுப் பேற்றுக்கொண்டார். தொடர்ந்து அமைச்சர்கள், கவுன்சிலர்கள் திமுக பொறுப்பாளர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேயராக பதவியேற்ற பின்னர் ரங்கநாயகி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில், எனக்கு இந்த பதவியை அளித்த கலைஞர், முதலமைச்சர், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி, கே.என்.நேரு, முத்துசாமி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர், திமுக மாவட்டச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இப்போது தான் பொறுப்பு ஏற்றுள்ளேன்.
எனக்கு எனது வார்டை பற்றி தான் தெரியும். இனி அனைவருடனும் கலந்து ஆலோசித்து எது அவசியம், எது அவசரம் என்பதை கேட்டு செயல்படுவேன் எனத் தெரிவித்தார். மேலும் கோவை மக்களுக்கு என்ன திட்டங்களை செயல்படுத்துவீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர் நான் இப்போது தான் மேயராக பொறுப்பேற்றுள்ளேன். எனது பணிகள் பற்றி படிப்படியாக தெரிந்து கொண்டு செயல்படுவேன். நான் செய்வதை உங்களுக்கு தெரியப்படுத்துவேன். மக்களின் தேவைகளை கேட்டறிந்து செயல்படுவேன் என்று கூறினார்.
-பவானி கார்த்திக்