தமிழகத்தில் ஓபிஎஸ் தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்றும், அந்தக் கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும் ஓபிஎஸ் அணியின் கொள்கைப் பரப்பு செயலாளர் புகழேந்தி பேட்டி…
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் வேங்கையன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் அணியின் கொள்கைப் பரப்பு செயலாளர் புகழேந்தி கலந்துகொண்டு, வரும் மக்களவைத் தேர்தலை கையாள வேண்டிய நடைமுறைகள் குறித்து, ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், இது தானாக வந்த கூட்டம். ஈபிஎஸ் போல பணம் கொடுத்து சேர்க்கவில்லை. இந்தக் கூட்டத்தின் வாயிலாக, பூத் கமிட்டி பணிகளை இன்று துவங்கி உள்ளோம். தேர்தலில் எப்படி செயல்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளோம். ஓபிஎஸ் அணியின் சார்பில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளோம். அதிமுகவை பொறுத்தவரை இரண்டு அணிகளாக செயல்பட்டு வருவது உண்மைதான். ஏனெனில், எந்த இடத்திலும் தேர்தல் கமிஷன் பழனிச்சாமி பொதுச் செயலாளர் என்று சொல்லவில்லை. நீதிமன்றம் கூறியது என்று சொல்லி, உச்சநீதிமன்றம் சொல்லாத ஒன்றை இபிஎஸ் பொய்யாக கூறி வருகிறார்.
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, ஓபிஎஸ் தான் இதுவரை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இப்படி இருக்கும்போது கொடியை கட்டாதே, வேட்டியை கட்டாதே என நீதிமன்றத்திற்கு அவர்கள் அலைந்து திரிந்து வருகிறார்கள். இபிஎஸ் துரோகி என்பதை அறிந்துகொள்ள பாஜகவிற்கு இத்தனை ஆண்டுகள் தேவையா?, பழனிச்சாமியை பக்கத்துல அமர வைத்ததின் விளைவை பாஜக தற்போது புரிந்துகொண்டது. நம்பிக்கைக்கும், நாணயத்திற்க்கும் பெயர்போனவர் ஓபிஎஸ் தான் என்பதை பாஜக உணர்ந்து விட்டது.
எங்களோடு யார் கூட்டணிக்கு வந்தாலும் அவர்கள் ஒபிஸ் தலைமையைத்தான் ஏற்றுக்கொள்வார்கள். எங்களிடம் பல கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. ஓபிஎஸ் தலைமையில்தான் கூட்டணி அமையும். அந்த கூட்டணி தான் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.
பாஜக கூட்டணியில் இருந்து இபிஎஸ் வெளியேறியதை பாராட்டிய சீமான் அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி வைப்பதை எதிர்த்து சி.வி.சண்முகமும், ஜெயக்குமாரும் பேசி வருகிறார்கள். அதே சமயம் வேலுமணியும், தங்கமணியும் இதைப்பற்றி வாய் திறப்பதில்லை. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு சிறுபான்மையினர் வாக்கு கிடைக்கும் என்று இப்போதுதான் பழனிச்சாமிக்கு தெரிந்ததா? பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா முதுகில் குத்திய பழனிசாமியை அவர்கள் பதிலுக்கு எப்படி குத்தப் போகிறார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அனைத்து வழக்குகளும் நிலுவையில் உள்ளன. முன்னோடி நிர்வாகிகளான நாங்கள் எல்லாம் ஜெயிலுக்கு போக வேண்டுமா? என போர்க்கொடி தூக்கி உள்ளனர். இவர்கள் ஜெயிலுக்கு செல்வது உறுதி. பழனிச்சாமி தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாத சூழ்நிலை வரும். அப்போது, அதிமுகவை தலைமையேற்று வழிநடத்திச் செல்லும் பொறுப்பை ஓபிஎஸ் வகிப்பார். அதன்பின் ஓபிஎஸ் முதலமைச்சர் ஆவதை ஈபிஎஸ் சிறையில் இருந்து பார்ப்பார் என்று தெரிவித்தார்.