நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் ஒன்றிய அரசை எதிர்த்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர். முக்கிய நான்கு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தெலங்கானா, மத்தியப் பிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 560 மாவட்டங்களில் இருந்து 60,000 கிராமப்புற விவசாயிகள் குழுக்களைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக போராட்டத்தை நடத்தும் பாரதிய விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தில் பிரச்சார தலைவர் ராகவேந்திர படேல் கூறுகையில், நாட்டில் தொடர்ந்து விவசாயிகள் சந்தித்து வரும் இக்கட்டான சூழல்கள் குறித்து கடந்த நான்கு மாதங்களாக மக்களுக்கு எடுத்துரைத்து வருகிறோம். அதன்படி, 20,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாத யாத்திரை, சுமார் 13,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு சைக்கிள் பேரணி, மற்றும் 18,000 தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி உள்ளதாக கூறினார். மேலும், பல்வேறு இடங்களில் மிகப் பெரிய பொதுக்கூட்டங்களையும் நடத்தியுள்ளதாகவும் கூறினார்.இதனை தொடர்ந்தே டெல்லியில் ஒன்று கூட்டியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், நான்கு முக்கிய கோரிக்கைகளான குறைந்தபட்ச ஆதார விலையை செலவினங்களின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும், அனைத்து வகையான விவசாய உற்பத்திப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி-யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், தற்போது ஒன்றிய அரசு ஏழை விவசாயிகளுக்கு அளித்து வரும் ஆண்டுக்கு ரூ.6,000 எனும் உதவி தொகையை உயர்த்த வேண்டும். மேலும், ஏற்கனவே மரபணு மாற்ற பயிர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று பாரதிய விவசாயி சங்க பிரச்சார தலைவர் கூறியுள்ளார்.