சென்னை மாநகராட்சியின் 49வது மேயராக திமுக வேட்பாளர் ஆர்.பிரியா ராஜன் பதவி ஏற்றுக்கொண்டார்.
கடந்த மாதம் (பிப்ரவரி) 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. அதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம்(மார்ச்.02) பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதற்கிடையில், மேயர், துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு இன்று(மார்ச்.04) மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு பிரியா ராஜனும், துணை மேயர் பதவிக்கு மகேஷ் குமார் போட்டியிடுவார் என நேற்று(மார்ச்.03) திமுக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயராக பிரியா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் ககன் தீப் சிங் பேடி அறிவித்தார். அதன்பின் திமுக வேட்பாளர் ஆர்.பிரியா ராஜனுக்கு ககன் தீப் சிங் பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து ஆர்.பிரியா ராஜனுக்கு ஆணையர் வாழ்த்துத் தெரிவித்து மேயருக்கான அங்கியையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மேயருக்கான அங்கியணிந்து இருக்கையில் அமர்ந்த ஆர்.பிரியா ராஜனுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், அவர்கள் இருவரும் மேயருக்கான செங்கோலை ஆர்.பிரியா ராஜனுக்கு அளித்தனர்.
மிகவும் இளம் வயதில்(28 வயது) சென்னை மாநகராட்சி மேயராகும் முதல் பட்டியலின பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post