நாங்குநேரி அருகே நள்ளிரவில் கார் கவிழ்ந்து விபத்தில் தனியார் தொலைக்காட்சி கேமராமேன் பலி. மூவர் படுகாயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதி.
சந்திரன்2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பான செய்திக்கு விஞ்ஞானி நம்பினாராயணனை நேரில் சந்திப்பதற்காக நெல்லையிலிருந்து செய்தியாளர் குழு ஒன்று நேற்று மாலை ஒரு காரில் புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றது. செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் அக்குழுவினர் அங்கிருந்து காரில் மீண்டும் நெல்லை நோக்கி திரும்பி வந்துள்ளனர்.
நள்ளிரவு ஒரு மணி அளவில் நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலை உள்ள தனியார் மில் அருகே கார் கட்டுப்பாட்டு இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது. அதில் காரை ஓட்டி வந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி கேமரா மேன் சங்கர்(32) தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன்(45) நியூஸ் 7 கேமரா மேன் வள்ளிநாயகம்(38) மற்றொரு கேமரா மேன் நாராயணன்(35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற நாங்குநேரி போலீசார் விபத்தில் சிக்கி பலியான சங்கரின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து நெல்லை செய்தியாளர்கள் அனைவரும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து விபத்தில் சிக்கிய சக செய்தியாளர்களுக்கு உதவி செய்தனர். செய்தி சேகரித்து பின் வீடு திரும்பும் வழியில் செய்தியாளர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் விபத்தில் இறந்த சங்கருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த கார் விபத்து நெல்லை மாவட்ட செய்தியாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
Discussion about this post