தமிழ்நாடு எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க திட்டம்..!! சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!
தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த 14-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த இரண்டு பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் 17-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு 21-ம் தேதி நிதி அமைச்சரும், வேளாண் துறை அமைச்சரும் பதில் அளித்தனர். இதனையடுத்து சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சட்டப்பேரவை கூடவில்லை. இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது.
அதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு 2026ம் ஆண்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. அதன்படி, புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட உள்ளதால் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டு இருக்கும் சூழல் என்பது தான் தற்போது நிகழ்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது.
நமது மக்களைப் பாதிக்கும் முடிவுகள், நம்மை அறியாதவர்களால் எடுக்கப்படும்.பெண்கள் அதிகாரம் அடைவதில் பின்னடைவுகளைச் சந்திப்பார்கள். மாணவர்கள் முக்கிய வாய்ப்புகளை இழப்பார்கள். உழவர்கள் ஆதரவின்றி பின்தங்குவார்கள். நமது பண்பாடு, அடையாளம் மற்றும் முன்னேற்றம் ஆபத்தை சந்திக்கும். காலம் காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வரும் சமூகநீதி பாதிக்கப்படும்.
தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்கின்ற தொகுதி மறுவரையறை விழிப்புணர்வு, தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மக்கள்தொகை கட்டுபாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்று பேசியுள்ளார்.
வட மாநிலங்களில் எந்த விகித்தத்தில் தொகுதிகள் மறுவரையறைக்கப்படுகிறதோ அதே விகிதத்தில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்கின்ற தொகுதி மறுவரையறை விழிப்புணர்வு குறித்து தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள்தொகை கட்டுபாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்தித்து வலியுறுத்தி உள்ளதாகவும், இதுகுறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.