ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ,100 நாள் வேலை அட்டையை அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என தண்டோரா மூலம் அறிவித்த ஊர் மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியம் அய்யம்பாளையம் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போளூர் நகரத்திற்கு செல்ல பேருந்து வசதி முற்றிலும் இல்லாததால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கிடவும், விவசாயிகள் தங்களது விலை நிலங்களுக்கு தேவையான இடு பொருட்கள் வாங்கவும் விளைநிலங்களில் விளையும் விலை பொருட்களை வெளியூர் சந்தைகளுக்கு எடுத்துச் செல்லவும் குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் போளூர் நகரில் அமைந்துள்ள அரசு பள்ளிகளுக்கு சென்று வர அய்யம்பாளையம் பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எள்ளுப்பாறைக்கு நடந்து சென்று அதன்பின்பு அங்கிருந்து போளூருக்கு சென்று வர சூழல் உள்ளது.
இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதால் ஆத்திரம் அடைந்த அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தண்டுரா மூலம் தங்களது இந்திய குடிமக்களுக்கான ஆதாரமாக விளங்கும் ஆதார் அட்டை – ரேஷன் கார்டு- வாக்காளர் அடையாள அட்டையை அனைத்தையும் அரசாங்கத்திற்கு ஒப்படைக்கும் போராட்டத்தில் பொதுமக்கள் சிறுவள்ளூர் குளத்துமேடு பகுதியில் ஒன்று கூடினர்.
மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள எள்ளுப்பாறை வரை வருகின்ற பேருந்தை அடுத்த பேருந்து நிறுத்தமான ஐயம்பாளையம் பகுதிக்கு வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டுமென்பதே இப்பகுதி மக்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது. அப்போது அங்கு வந்த கடலாடி காவல்துறையினர் பொதுமக்களிடம் ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு அங்கீகாரத்தை திரும்ப ஒப்படைக்க கூடாது என பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு 15 தினங்களுக்குள் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் எனக் கூறியதை எடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.