பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!
பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டியின் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். தள்ளாத வயதிலும், இயற்கை விவசாயம், ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கம், அரசியல் என்று சுறுசுறுப்பாக வலம் வந்துகொண்டிருந்த பாப்பம்மாள் பாட்டி வயது மூப்பின் காரணமாக அவரது வீட்டில் காலமானார்.
இவருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. மேலும் கடந்த வாரம் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் இவருக்கு பெரியார் விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.
இந்த நிலையில், உயிரிழந்த பாப்பம்மாள் பாட்டிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்..
பாப்பம்மாள் பாட்டியின் மறைவு தமக்கு மிகுந்த வலியை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இயற்கை விவசாயத்தில் அவர் முத்திரை பதித்ததாகவும் பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாப்பம்மாள் மறைவு செய்தியறிந்து கலங்கிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
1965 ஆம் ஆண்டு நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொடங்கி நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வரை அத்தனை போராட்டங்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், சொல்லொணாத் துயரத்தில் நம்மை ஆழ்த்திவிட்டு அவர் பிரிந்துவிட்டதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தனது குடும்பத்தில் ஒருவரைப் பிரிந்த வலியுடன் தவிப்பதாக தனது இரங்கல் பதிவில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பாப்பம்மாள் பாட்டிக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இயற்கை விவசாயத்திலும், மக்கள் சேவையிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி நமக்கெல்லாம் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த கோயம்புத்தூர் பாப்பம்மாள் அவர்கள் 108 வயதில் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன் என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..