தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினி காந்த். இவரது நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து ரஜினிகாந்த் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இயக்குநர் நெல்சனுக்கு, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படமும் எதிர் மறையான விமர்சனக்களைப் பெற்றதால், இந்தக் கூட்டணி உருவாகுமா என சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், இந்தக் கூட்டணி உருவாவதை நெல்சன் உறுதி செய்தார். இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன் தினம் தொடங்கியதாக படக்குழு அறிவித்தது. இதையடுத்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான அறிவிப்பு நேற்று முன் தினம் வெளியானது. அதன்படி இப்படத்தில், ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரம்யா கிருஷ்ணன், 1999ம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தில் ரஜினிகாந்த்திற்கு வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றிருந்தார். அதன் பிறகு ரஜினிகாந்த்தின் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான ‘பாபா’ படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 20 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, ரஜினிகாந்தும் ரம்யா கிருஷ்ணனும் இணைந்து நடிக்க உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்படத்தில், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது படத்தின் எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்துள்ளது. மேலும் யோகி பாபு, ’தர்பார்’ படத்திற்கு பிறகு ரஜினியுடன் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.