ஆன்லைன் வழிப்பறி திருடன்..! சென்னை இன்ஜினியர் கைது..!!
சென்னை தாம்பரம் சேலையூரில் உள்ள காமராஜபுரம், நேதாஜி பகுதியை சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 70). இவரிடம் 2 பவுன் சங்கிலியும், கிழக்கு தாம்பரம், ஆஞ்சநேயர் தெருவில் நித்திய சுபா (49) என்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை அந்த பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் பறித்து சென்றுள்ளார்.
இந்த சம்பவங்கள் குறித்து தகவலறிந்து வந்த சேலையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கி உள்ளனர். அப்போது சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான சில சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கோவில்பட்டியை சேர்ந்த அருணாச்சலம் என்பது தெரிந்தது.
அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் அருணாச்சலத்தை கைது செய்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். அப்போதே பல தகவல்கள் வெளியானது.
ஆன்லைன் ட்ரேடிங் :
சிவில் என்ஜினீயரிங் படித்துள்ள அருணாச்சலத்திற்கு வேலை கிடைக் காததால் ஆன்லைன் டிரேடிங்கில் கவனம் செலுத்தி பணம் சம்பாதிக்க விரும்பியுள்ளார். அதில் பணம் முதலீடு செய்த பின் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது தனது தங்கையின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை மற்றும் பலரிடம் கடன் வாங்கி சுமார் 15 லட்சம் ரூபாய் வரை ஆன்லைன் டிரேடிங்கில் இழந்திருக்கிறார்.
ஆன்லைன் டிரேடிங் மூலம் சம்பாதித்த பணத்தை மீண்டும் அதே ட்ரேடிங்கில் இழந்துள்ளார். பெரும் கடனாளியான அருணாச்சலம், சரியான வேலை இல்லாததாலும் கடனை திருப்பி செலுத்த முடியாததால் “யூடியூப்” பார்த்து சங்கிலி பறிப்பில் ஈடுபடலாம் என்ற விபரீத முடிவு எடுத்துள்ளார்.
அதன்படியே தனியாக செல்பவர்களை நோட்டமிட்ட சீதாலட்சுமி, மற்றும் நித்திய சுபா ஆகிய இருவரிடமும் அருணாச்சலம் சங்கிலி பறித்ததும் தெரிந்தது. அதில் 5 பவுன் நகையை தங்கையின் திருமணத்திற்காக வீட்டில் கொடுத்துள்ளார்.
மீதமுள்ள 2 பவுன் நகையை அடகு வைத்து பணம் பெற்றதும். விசாரணையில் வருகிற 10-ந் தேதி தங்கைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கைதான அருணாச்சலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ