ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ்..! சிக்கிய ரவுடிகள்..! பரபரப்பான நெல்லை..!
தற்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-யாக “டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்” பொறுப்பேற்றுள்ளார். பொறுப்பேற்ற முதலிலே அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார். ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொள்ள அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் 1750 ரவுடிகளின் பட்டியல் எடுக்கப்பட்டு அதில் 400 ரவுகளை மட்டும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ் என இரண்டு ஷிப்ட்கள் அடிப்படையில் ரவுடிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்கும் பணியை காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனை தொடர்ந்து நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மூர்த்தியின் உத்தரவின் பேரில் மாநகர பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. மாநகரின் முக்கிய பகுதிகளான 26 இடங்களில் காவல்துறை வாகன தணிக்கையை தீவிர படுத்தியது. உதவி ஆணையாளர்கள் தலைமையில் மாநகர் பகுதி முழுவதும் நடைபெறும் வாகன தணிக்கையின் போது வரக்கூடிய வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு விதிமீறல்கள் தொடர்பான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், ஆயுத புழக்கங்கள் குறித்தும் தீவிரமாக சோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. சட்ட விரோதமாக ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்ற கோணத்திலும் வாகன தணிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டனர்.
இதற்கிடையில் நெல்லை டவுன் பகுதியில் போலீஸ் நடத்திய வாகன தணிக்கையின் போது நடுக்கல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த கணபதி என்பவரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அவர் தனது இருசக்கர வாகனத்தில் அரிவாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தார்.
எனவே, போலீசார் அரிவாள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், விசாரணையில் கணபதி ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் விவகாரம், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது உட்பட பல்வேறு விஷயங்களை சுட்டிக்காட்டி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் காவல்துறை இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி.வெ