லண்டன் நகரில் புதிதாகப் பிறந்த 7 பச்சிளம் குழந்தைகளைக் கொன்று, மேலும் தனது பாதுகாப்பில் இருந்த ஆறு குழந்தைகளை கொல்ல முயன்ற செவிலியரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வடக்கு இங்கிலாந்தின் செஸ்டர் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் கடந்த 2015-ம்ஆண்டு ஜூன் மாதத்தில் 3 பச்சிளம் குழந்தைகள் மர்மமான முறையில் அடுத்தடுத்து இறந்தன. இது அங்கு பணியாற்றிய இந்திய வம்சாவளி மருத்துவர் டாக்டர் ரவி ஜெயராமுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
குழந்தைகள் வார்டில் பணியாற்றும் லூசி லெட்பி என்ற செவிலியர் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை கண்காணிக்கத் தொடங்கினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த ஒரு குழந்தையின் ஆக்ஸிஜன் அளவு குறைய தொடங்கியபோது, அங்கு பணியில் இருந்த செவிலியர் லூசி எதுவும் செய்யாமல் இருந்துள்ளார். இதனால் குழந்தைகள் இறப்புக்கு செவிலியர் லூசி தான் காரணம் என சந்தேகம் அடைந்த டாக்டர் ரவி ஜெயராம், மருத்துவமனையில் பல கூட்டங்களை நடத்திய செவிலியர் லூசிசெயல்பாடு குறித்து நிர்வாகத்திடம் புகார் கூறினார்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் முதலில் கண்டுகொள்ளாமல் இருந்தது. அதன் பின்பு அங்கு குழந்தைகள் இறப்பது தொடர்கதையாக இருந்துள்ளது. ஓராண்டு காலத்தில் 7 குழந்தைகள் இறந்ததால், இந்த விவகாரத்தை போலீஸிடம் தெரிவிக்க டாக்டர் ரவி ஜெயராமுக்கு தேசிய சுகாதார சேவைதுறை அனுமதி வழங்கியது. அதன்பின் இந்த விஷயத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கினர்.
செவிலியர் லூசி லெட்பியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகளை வேண்டும் என்றே கொலை செய்ததை லூசி ஒப்புக் கொண்டார். ஊசி மூலம் காற்று, இன்சுலின் ஆகியவற்றை செலுத்துதல், பால் அல்லது திரவங்களை அளவுக்கு அதிகமாக கொடுத்தல், குழந்தையின் வாய் வழியாக காற்றை செலுத்துதல் போன்ற முறைகளில் குழந்தைகளை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். போலீஸார் நடத்திய சோதனையில் லூசியின் டைரி ஒன்றில் சில குறிப்புகளும் இருந்துள்ளன.
‘‘நான் வேண்டும் என்றே அவர்களை கொன்றேன். ஏனென்றால், அவர்களை பராமரிக்கும் அளவுக்கு நான் நல்லவள் அல்ல. நான் கொடியவள், அதனால்தான் ‘‘இதுபோல் செய்தேன்’’. ‘‘இன்று உனது பிறந்தநாள், ஆனால் நீ இங்கு இல்லை. அதற்காக மிகவும் வருந்துகிறேன்’’ என்ற வாசகங்கள் செவிலியர் லூசி லெட்பியின் சைக்கோ மன நிலையை காட்டுவதாக இருந்தது.
இதையடுத்து லூசி கடந்த 2018-ம் ஆண்டு ஜுலை மாதம் கைது செய்யப்பட்டார். கடந்த 2020-ம் ஆண்டில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆதாரங்கள் எல்லாம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஜோன்ஸ் கூறுகையில், ‘‘காற்று, பால், திரவங்கள், இன்சூலின் உட்பட சில மருந்துகளை செவிலியர் லூசி ஆயுதங்களாக பயன்படுத்தி குழந்தைகளை கொலை செய்துவிட்டு, இயற்கை மரணம் அடைந்ததாக தன் உடன் பணியாற்றியவர்களை ஏமாற்றியுள்ளார். அவர் தனது மருத்துவ அனுபவத்தில் கற்ற விஷயங்களை ஆயுதமாக பயன்படுத்தி குழந்கைளுக்கு தீங்கு ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தியுள்ளார். குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்தில் செவிலியர் லூசி தீங்கு ஏற்படுத்தியுள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.
மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் செவிலியர் லூசி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மீது 6 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் உள்ளன. அவருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.