கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலையை இனி நடந்து பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், திருவள்ளுவர் எழுதிய 133 அதிகாரங்களைக் குறிக்கும் வகையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே விவேகானந்தர் பாறையும் அமைந்துள்ளது.
விவேகானந்தர் பாறைக்கு மிக எளிதாக படகில் சென்று விட முடியும். ஆனால், திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் பகுதியில் அடிக்கடி கடல் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும். இதனால், படகு கடல் பாறைகளில் தட்டும் அபாயம் இருப்பதால் அங்கு படகு சேவை வருடத்தின் பெரும்பகுதி நாட்களில் ரத்து செய்யப்படும்.
இந்த நிலையை மாற்ற விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலை இடையே பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கென, 27.96 கோடி ரூபாய் செலவில் கடல்சார் நடை பாலம் அமைக்கப்படுகிறது. இந்தப் பாலம் அமைய உள்ள பகுதியை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.