புறக்கணிக்கப்பட்ட தமிழ்நாடு..! அறிவிக்கப்பட்ட திட்டம் நிறைவேற்றப்படுமா..? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி..!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்றைக்கு தாக்கல் செய்திருக்கின்ற நிதிநிலை அறிக்கை மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.
மூன்றாவது முறையாக வாக்களித்த மக்களுக்கு இந்த பாஜக கூட்டணி அரசு எந்த நன்மையும் செய்யத் தயாராக இல்லை என்பதை இந்த நிதிநிலை அறிக்கை தெளிவாக காண்பிக்கிறது. நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு என்று என்னென்ன திட்டங்கள் அறிவிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் நான் டிவிட்டரில் வெளியிட்டிருந்தேன்.
அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள், நீங்களும் வெளியிட்டு இருக்கிறீர்கள். பல கோரிக்கைகளை அதில் எடுத்து வைத்தேன். அதில் எதையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை. மைனாரிட்டி பாஜகவை, மெஜாரிட்டி பாஜக-வாக ஆக்கிய ஒரு சில மாநிலக் கட்சிகளை திருப்திப்படுத்தும் வகையில் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.
அறிவித்துள்ளார்களே தவிர, அதையும் நிறைவேற்றுவார்களா என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் சந்தேகம் தான். எப்படி தமிழ்நாட்டுக்கு மெட்ரோ ரயில் என்று அறிவித்து விட்டு, நிதி ஒதுக்காமல் இன்றைக்கு வரையில் ஏமாற்றி வருவதைப் போல அதுபோல, அந்த மாநிலங்களுக்கும் எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
தமிழ்நாட்டுக்கான எந்த சிறப்புத் திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. நமது கோரிக்கைகள் எதுவுமே இதில் நிறைவேற்றப்படவில்லை. புதிய ரயில்வே திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. ஒன்றிய பாஜக ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களைங்களையும் நிதி அமைச்சர் மறந்தே போய்விட்டார்.
வருகின்ற 27-ஆம் தேதி பிரதமரின் தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நானும் அதில் பங்கெடுக்க திட்டமிட்டு இருந்தேன். அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். ஆனால், நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவேண்டாம் என்று நான் முடிவெடுத்திருக்கிறேன். அதைப் புறக்கணிக்கப் போகிறேன்.
தமிழ்நாட்டை புறக்கணிக்கும் ஒன்றிய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதே சரியானது என நினைக்கிறேன். தமிழ்நாட்டின் தேவைகளை, உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து நாங்கள் போராடுவோம். நாளைய தினம் நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் டில்லியில் போராட்டம் நடத்தப் போகிறார்கள், அதற்கு நாங்கள் அனுமதியும் வழங்கியிருக்கிறோம்.
தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருக்கிறார்கள். புறக்கணித்த காரணத்தினால் பிரதமர் கூட்டுகின்ற அனைத்து முதலமைச்சர் கூட்டத்தை புறக்கணிக்கப் போகிறேன் என்று தெரிவித்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..