நீட் தேர்வு முறைக்கேடு..! தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும்..! அமைச்சர் மா.சுப்பிரமணியம் கேள்வி..!
நீட் தேர்வு முடிவுகளில் உள்ள முறைகேடுகள், குழப்பங்களுக்கு தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைக்க உள்ளார்.
இந்நிகழ்வில் பங்கேற்க நேற்று இரவு மேட்டுப்பாளையம் வந்தடைந்த அமைச்சர் அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளார். அதன் பின் உடற்பயிற்சி செய்வதை கண்டிப்பான வழக்கமாக வைத்திருக்கும் அமைச்சர் மா.சு. இன்று அதிகாலை 5 மணிக்கு காட்டூர் ரயில்வே கேட் அருகில் ஜாகிங் சென்றுள்ளார்.
அங்கிருந்து வனபத்ரகாளியம்மன் கோயில், தேக்கம்பட்டி, தேவனாபுரம், மேடூர், சாலை வேம்பு, கண்டியூர், வெள்ளியங்காடு கிராமங்கள் வழியாக தோலம்பாளையம் வரை என சுமார் 21 கி.மீ கடந்து சென்றார். அப்போது, அப்பகுதி அவ்வழியாக உள்ள கிராமங்களின் நிலை, சுகாதாரம் குறித்து கேட்டறிந்தார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வில் 720க்கு 720 என்ற மதிப்பெண் பெற்றவர்கள் 67 பேர், இதுதான் மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
2020ம் ஆண்டு ஒருவர் மட்டுமே முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தார் 2021ம் ஆண்டு 3 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில் 2022ம் ஆண்டு ஒருவர், 2023ம் ஆண்டு விழுப்புரம் பகுதியை சேர்ந்த மாணவர் உள்ளிட்ட 2 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதனால் தான் தற்போது நீட் தேர்வின் மீது சந்தேகம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் அவர் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 7 பேர் 720க்கு 720 என்ற முழு மதிப்பெண்கள் வழங்கி இருந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள தேர்வு பட்டியலில் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண் இன்னும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது என தெரிவித்தார். ஒரு கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்தால் 716 மதிப்பெண்கள் வழங்கியிருக்க வேண்டும், தவறாக பதில் அளித்து இருந்தால் 715 மதிப்பெண்கள் வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை என தெரிவித்த அவர், இதனால் தான் நீட் விலக்கே நம் இலக்கு என்று கூறிவருகிறோம் என்றும் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தேசிய தேர்வு முகமை நிச்சயம் பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..