பணத்தை திருடி சென்ற போதை ஆசாமிகள்..!! மாவுகட்டுடன் பிடித்த போலீஸ்..!!
கோவை மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் ஆனந்த் மற்றும் லோகேஷ்வரன் ஆகியோர், லாரியில், திருச்சி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். பெட்டவாய்த்தலை அருகே உள்ள காவல்காரபாளையம் பகுதிக்கு லாரி வந்தபோது, இருவரும் உணவு அருந்த சென்றுள்ளனர்.
உணவு அருந்தி முடித்துவிட்டு மீண்டும் லாரிக்கு வந்து பார்த்தபோது, லாரியில் இருந்து குதித்து, 3 பேர் தப்பியோடியுள்ளனர். அவர்கள் யார்? ஏன் வண்டியில் இருந்து குதித்து தப்பி ஓடுகிறார்கள் என்பது புரியாமல் இருந்த லாரி ஓட்டுநர்கள், அந்த 3 பேரையும் துரத்தி பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் அவர்கள் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர், லாரியில் வந்து பார்த்தபோது, அதில் இருந்த 50 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை தான், அவர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுநர்கள் இரண்டு பேரும், காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், குட்டப்பட்டு பகுதியில், சந்தேகத்திற்கிடமான வகையில், சிலர் சுற்றித் திரிவதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று பார்த்தபோது, 5 பேர் காரில் இருந்துள்ளனர். அவர்களை பிடிக்க முற்பட்டபோது, தப்பிச் செல்ல முயற்சி செய்தனர். இருப்பினும் விடாத காவல்துறையினர், அவர்களை துரத்தி பிடித்தனர். இதனால், காரில் இருந்த 5 பேரில், 3 பேருக்கு, காரில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து, பிடிப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், லாரியில் இருந்த 50 லட்சத்து 68 ஆயிரம் ரூபாயை திருடியது, அவர்கள் தான் என்பது, தெரியவந்தது. இதையடுத்து, பணத்தை மீட்ட காவல்துறையினர், காரை பறிமுதல் செய்ததோடு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்