குளித்தலை அருகே மகன் இறந்த துக்கத்தில் அரளி விதையை அரைத்து குடித்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சுண்டுகுழிப்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜன் மகன் செல்வராஜ். 24 வயது இளைஞர் தொடர்ந்து மொபைல் போனில் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதை அவனது தாய் சுமதி, தந்தை கோவிந்தராஜ் கண்டித்துள்ளனர். தொடர்ந்து தாய் திட்டியதில் விரக்தி அடைந்த செல்வராஜ் நேற்று மாலை அருகில் உள்ள ராசு என்பவரின் தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகன் இறந்ததை தாங்கிக் கொள்ள முடியாத தாய் சுமதி அரளி விதையை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மனைவியை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி தாய் சுமதியும் உயிரிழந்துள்ளார். இது குறித்து சிந்தாமணிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகன் இறந்த துக்கத்தில் அரளி விதையை அரைத்து குடித்த தாயும் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
















