இனி பட்டாசு வெடிக்க கூடாது.. என சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..! ஏன் தெரியுமா..?
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சீனிவாசபுரம் அருகே சுப்பிரமணியபுரம் என்ற இடத்தில் திமுக மயிலாடுதுறை மாவட்ட மற்றும் காரைக்கால் மாநில இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார் சேலத்தில் நடைபெறும் மாநாட்டிற்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக சார்பில் ரூ.15 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.
அதை தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாநாட்டிற்கு 50,000 நிதி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசியதாவது டிசம்பர் மாதம் 17ம் தேதி சேலத்தில் திமுக இளைஞர் அணி சார்பில் 2வது மாநில மாநாடு நடைபெறுகிறது.
இதற்கு அழைப்பு தரும் வகையில் தான் இளைஞர் அணி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. நான் ஒன்று சொல்லி கொள்கிறேன்.
இளைஞர் அணி சார்பில் நடைபெறும் கூட்டங்களில் பட்டாசு வெடிக்க கூடாது. பூங்கொத்து கொடுக்க கூடாது. சால்வை அணிவிக்க கூடாது. இதற்கு பதிலாக கட்சி துண்டு, வேஷ்டிகள் கொடுக்கலாம்.
அல்லது மாநாட்டிற்கு நிதியாக ரூ.100 கூட கொடுக்கலாம். இளைஞர் அணி வளர்ச்சிக்கு நிதி கொடுக்கலாம். புத்தகங்கள் கொடுக்கலாம். ஏன்என்றால் நமது இயக்கம் படித்து, படித்து வளர்ந்த இயக்கம்.
இளைஞர் அணி மாநாடு குறித்த செயல்வீரர் கூட்டம் முதன் முதலில் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டு தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம் முடித்து கொண்டு மயிலாடுதுறை வந்துள்ளேன்..
மயிலாடுதுறை மாவட்டம் திராவிட கழகத்துடைய கோட்டை சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை கலைஞர் பிறந்த மண் திருக்குவளையில் இருந்து தொடங்கினேன். அப்போது மயிலாடுதுறை அருகே குத்தாலம் பகுதியில் போலீசார் என்னை கைது செய்தனர்.
இன்று பாதுகாப்பிற்கு நிற்கும் போலீசார் அன்று என்னை கைது செய்தனர். தேர்தல் பிரச்சரத்திற்கு செல்ல தடை விதித்து தான் போலீசார் கைது செய்தனர். என்னை போலீசார் கைது செய்த போது மயிலாடுதுறை மக்கள் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்து எனக்கு ஆதரவு அளித்தனர்.
அந்த ஆதரவு இன்று அமைச்சராகி நிற்கிறேன். இந்த மாவட்டம் மட்டும் தான் சரியாக செய்துள்ளது. திமுக இளைஞர் அணி சார்பில் சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும்.
அதற்கு செயல்வீரர்கள் மட்டும் வந்தால் போதாது குடும்பத்துடன் வரவேண்டும். செயல்வீரர்கள் என்றால் என்ன தலைமை என்ன கட்டளை இடுகிறதோ அதை சரியாக செயல்படுத்த வேண்டும். நமது முதல்வர் இளைஞர் அணியில் இருந்த போது கலைஞர் இட்ட கட்டளைகளை சரியாக நிறைவேற்றினார்.
Discussion about this post