பேருந்தின் மாத பஸ் பாஸை இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பெற்றுகொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் தினசரி அலுவலகம் சென்று வேலை செய்வோர் வசதிக்காக பயணக் கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகிறது. இது தினசரி அரசு பேருந்துகளை பயன்படுத்துவோருக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது.
தற்போது பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் அமலில் இருக்கிறது. இதனால் தமிழக அரசின் நகரப் பேருந்துகளில் பெண்கள் தினசரி இலவசமாக பயணித்து வருகின்றனர். அதேசமயம் மற்ற பேருந்துகளில் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டும். இதேபோல் வேலைக்கு செல்லும் ஆண்களும் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டும். இவர்களுக்கு பஸ் பாஸ்கள் பெரிதும் உதவிகரமாக இருந்து வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் வழங்கப்பட்டு வரும் பயணக் கட்டணச் சலுகை அனுமதிச் சீட்டுகளை இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, பயனாளிகள் பெற வழிவகை செய்யப்படும் என்று சட்டமன்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். எனவே அதன்படி போக்குவரத்துத் துறை அமைச்சர் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.