தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தேவைப்படும் போதெல்லாம் அதை காவிரியில் இருந்து பெற்று தருவது தான் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பணி, ஆனால் ஆணையம் இதை செய்யவில்லை என்பது தான் தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டு. எனவே, இந்த குற்றச்சாட்டுக்கு ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது என உச்சநீதிமன்றம் காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலளித்தார்.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறந்து விட கோரும் மனுவை விரைந்து விசாரிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், இதுதொடர்பாக விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டது.
அதன்படி, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா, பி.கே.மிஸ்ரா ஆகிய 3 பேர் அடங்கிய புதிய அமர்வில் நேற்று காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து நீதிபதிகள் கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஆகஸ்ட் 28-ல் நடத்த வேண்டும். காவேரியில் தண்ணீர் திறப்பு, இரு மாநிலங்களின் கோரிக்கை, மழைப்பொழிவு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் ஆலோசித்து முடிவெடுத்து, அதன் விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட்டு, வழக்கு செப், 1ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.