மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு..! முக்கிய அருவிகளில் குளிக்க தடை..!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 78 அடியாக இருந்த நிலையில் இன்று 82 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, தமிழகத்துக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.62 அடியை எட்டியது. அணையின் நீர் இருப்பு 44.61 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடியில் இருந்து 1.65 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 67 அடியாக இருந்த நிலையில், நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒரே நாளில் 13 அடி உயர்ந்துள்ளது.
இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளை மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனிடையே தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்தது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 77000 கனடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 70000 கனடியாக குறைந்துள்ளது.
சுமார் 7ஆயிரம் கன அடி குறைந்துள்ளது. இருந்த போதும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் இன்று மாலைக்குள் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கவும் ஆற்றில் குளிக்கவும் 8வது நாளாக தடை விதித்துள்ளது.
– லோகேஸ்வரி.வெ