வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி…!! செல்வப்பெருந்தகை கண்டனம்..!!
தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கமாக தமிழ், ஆங்கிலத்தில் வெளியாகிவந்த சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை, தற்போது இந்தியிலும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தென்னிந்திய மாநிலங்களில் முதன்முறையாக தமிழ்நாட்டில் இந்தியுடன் சேர்த்து மும்மொழியில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டது தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்தியாவில் கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வானிலை அறிக்கை ஆங்கிலத்துடன் வெளிவந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் முதன் முறையாக இந்தி மொழியுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இங்கு மும்மொழிக்கொள்கை குறித்து சர்ச்சையாகவுள்ள நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இடம்பெறும். இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது ஒன்றிய அரசு. இந்த செயல் ஒன்றிய அரசின் ஆதிக்க உணர்வையே காட்டுகிறது.
இந்தி மொழிக்கு இங்கு யாரும் விரோதிகள் கிடையாது. ஆனால், வலுக்கட்டாயமாக திணிப்பதைத்தான் எதிர்க்கின்றோம். எந்தவகையிலாவது இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பதிலேயே தீவிரமாகவுள்ள ஒன்றிய அரசுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். என இவ்வாறே அவர் பதிவிட்டுள்ளார்.