2 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் வெப்பநிலை இயல்பு நிலையிலிருந்து இரண்டு – மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பகல் நேரம் வெளியில் வாகனத்தில், கட்டுமான பணிகளில் வேலை செய்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வானிலை ஆய்வு மையமானது இன்றும் நாளையும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என கூறியுள்ளது.
இந்த வெயிலின் தாக்கத்தை தவிர்க்க நேற்றைய தினம் தமிழக முதல்வர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். நீண்ட தூரம் பயணம் செய்வோர், வெயிலில் வேலை செய்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும், கர்ப்பிணிகள், வயதானோர், குழந்தைகள் பிற்பகல் 12 மணி முதல் 3 மணிவரையில் வெளியில் செல்ல வேண்டாம் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார்.